» தமிழருக்கான தீர்வும் மீள்குடியேற்றமும்
*1987ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய (ராஜீவ்ஜே.ஆர்.) ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் சிலவற்றுக்கு அங்கீகாரம் வழங் கியது. அந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாரம்பரிய கொள் கைகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது.
* ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் இலங்கை குறித்த இந்தியாவின் பாரம்பரிய கொள்கை அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு அந்த நாட்டில் பிராஜா உரிமை பெற்றுக்கொடுப்பதும், ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதுமாகவே அமைந்திருந்தது. ஆயினும் பாரம்பரிய கொள்கைக்கு அப்பால் ஈழத்தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கு வகை செய்யும் ஓர் ஒப்பந்தமாகவும் அது விளங்கியது.
ஆனால் இப்போது, 2009ஆம் ஆண்டில் இலங்கை யில் நடைபெற்ற போரின் பின்னர், அந்த நாட்டின் மீது இந்தியாவின் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்த முடியாத தன்மையைக் காணமுடிகிறது.
போர் முடிந்து ஒரு வருடம் கடந்து சென்றுவிட்ட இவ் வேளையிலும், ஈழத்தமிழர்களின் ஜனநாயக உரிமை களை முற்றாக நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு இன்னமும் முன்வைக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக போரின் பின்னர் இலங்கை அர சின்மீது இந்தியாவினால் இவ்விடயத்தில் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்த முடியாத நிலைமை காணப் படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்க ளுக்கு கணிசமாகவேனும் இதுவரை இயல்புவாழ்க்கை ஏற்படுத்தப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக் கள் தமக்கு உண்டான பாதிப்பிலிருந்து இன்னமும் மீட்சி பெறாத மக்களாகவே உள்ளனர். அவர்களின் மீள்கட்டு மானத் தேவைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்பட வில்லை.
இவ்வாறு, இலங்கை அரசாங்கத்தின் பொடுபோக்குத் தன்மையையும் பொறுப்பற்ற இயல்பையும் அதே வேளை இந்தியாவின் செல்வாக்கு இழந்த நிலையையும் அசமந்தப்போக்கையும் சுட்டிக்காட்டி உள்ளார், 1987 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இந் திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவரா கப் பணிபுரிந்த(ஓய்வுபெற்ற) கேணல் ஹரிஹரன்.
பாதுகாப்புத் துறையிலும் இலங்கை விவகாரம் குறித் தும் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள ஹரிஹரன், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நிலைமையை மட்டுமன்றி, ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகுறித்து இந்நாட்டு அரசு ஓர் அங்குலமேனும் அசைந்துகொடுக்கத் தயாரில்லை; அதன் போக்கு அந்த வழியையே நாடி நிற்கிறது என்றும் பூடகமாகத் தெரிவித் திருக்கிறார். கேணல் ஹரிஹரன் அவர் சொல்லித்தான் இவை தெரியவேண்டும் என்பதில்லை.
ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைக் குறிப் பிடத்தக்க அளவிலேனும் நிறைவேற்றும் போக்கை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கமுடியாதிருக்கின்றது
தமிழ்மக்களின் உரிமைகளை ஆகக் குறைந்தது இந்த நாட்டில் பல்லாண்டு காலமாக வாழ்ந்துவரும் மக்கள் என்ற நிலையில் நின்றாவது யதார்த்தமாகச் சிந்தித்து ஒரு தீர்வை முன்வைக்கும் போக்குத் தென்படவில்லை நூறுக்கு ஒரு சதவீதம்தானும் தென்படவில்லை.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பதனைக் கையில் தொடுவது ""தீட்டு'' என்ற தோரணையில் இலங்கை அரசு செயற்பட்டு வருகிறது. இவை யாவும் இந்த நாட்டின் நிலைமை புரிந்த எவருக்கும் தெட்டெனப் புலப்படும் ஒன்றாகி விட்டன.
உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய வன்னி மக்களின் மீளக்குடியமர்வுப் பணிகளே ஆமை வேகத்தை விடக் குறைந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனால் உண்மையான கள நிலைமையைவிட அரசுக்கு நல்லபெயர் தேடித்தரும் பலபத்துப் பெருமடங்கு பெருப் பித்துக் காட்டப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து மீள் குடியமர்வுக்கான நிதி மற்றும் பொருள் உதவி பெறுவ தற்கான ஏற்பாடுகளில் காட்டப்படும் கரிசனையும் அக் கறையும் மக்களை மீளக்குடிமர்த்துவதில் காட்டப்படுவ தாக இல்லை.
வவுனியாவில் இருந்து சாவகச்சேரி வரையான ஏ9 வீதியில், அதன் இரு மருங்குகளிலும் முப்படைகளின் முகாம்கள் மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறும் வேகமும், அவற்றுக்குத் தேவை யான கட்டப்பொருள்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் கொட்டப்படும் விரைவுத் தன்மையும் வன்னி மக் களின் மீள்குடியேற்றத்தை விட, அந்தப் பிரதேசத்தை இராணுவப் பூமியாக மாற்றுவதில் அரசாங்கம் காட்டும் கரிசனையை பகுத்தறிவுள்ள எவரும் இலகுவில் புரிந்து கொள்ள வைக்கிறது.
இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸ், அதிரடிப்படிடை ஆகியவற்றுக்குரிய முகாம்களுக்கு என் றும் அலுவலகங்களுக்கு என்றும் ஏ9 வீதியின் இரு மருங்குகளிலும் உள்ள நிலத்தை வகுத்துப் பிரித்து முட் கம்பி வேலிகளைப் போட்டு வேலைகள் துரிதமாக நடை பெற்றுவருகின்றன.
அந்த வீதியில் நூறுக்கு ஐந்து வீதத்தில் தானும் பொதுமக்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படுவ தையோ அதற்குரிய கட்டுமானப் பொருள்கள் தருவிக் கப்பட்டுள்ளதையோ காணமுடியவில்லை.
இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கு வீடுகளைக் கட் டிக்கொடுக்க அரசிடம் பணம் இல்லை என்று கூறப்படு கிறது. ஆனால் ஏ9 வீதியில் இராணுவ முகாம்களையும் அலுவலகங்களையும் வேகவேகமாக நிர்மாணிக்க அரசி டம் நிதி வசதி இருக்கிறது...!?
தமிழ்ப் பகுதிகளை இராணுவ பூமியாக்கிய பின்னரே, உலகிற்கு ஒப்புதலுக்கு காண்பிக்க அரசியல் தீர்வு குறித்து அரசாங்கம் சிந்திக்கும், செயற்படும் என்ற தன்மை வெளிப் படுகிறது. அவ்வளவுதான்....!