» படகில் வந்த 78 இலங்கையர்களையும் பலவந்தமாக ஆஸி. திருப்பி அனுப்பும்
2009-10-29 07:07:00
அந் நாட்டுப் பிரதமர் தெரிவிப்பு
சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றில் ஆவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சமயம் அந்த நாட்டுக் கடற்படையினரால் இடை மறித்துக் கைது செய்யப்பட்டு சுங்ககப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இலங்கையர்களையும் பலவந்தமாக இந்தோனேஷியாவில் இறக்கவேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அந்த நாட்டின் பிரதமர் ஹெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஓசியானிக் வைகிங் என்ற சுங்க கப்பலில் கடந்த 10 நாள்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இலங்கையர்களும் அதிலிருந்து இறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை விசாரணை செய்வதற்கும் வைத்தியப் பரிசோதனை செய்வதற்கும் அனுமதிக்க மறுக்கின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்களைக் குறிப்பிட்ட கப்பலிலிருந்து இறக்குவதற்கான வழிமுறைகள் பற்றி இந்தோனேஷிய அவுஸ்திரேலிய அதிகாரிகள் பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளனர் என அவுஸ்திரேலியப் பிரதமர் ஹெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
கப்பலில் உள்ளவர்கள் பலவந்தமாக இறக்கப்படுவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விடயத்தில் தாங்கள் மிகவும் சவாலான, கடினமான, குழப்பமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் எனப் பிரதமர் ஹெவின் ரூட் பதிலளித்துள்ளார். கப்பலில் உள்ளவர்களை ஒழுங்கான முறையில், பலத்தைப் பயன்படுத்தாமல் இறக்க முடியும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அகதி அந்தஸ்துக் கோரிக்கையை எந்த நாட்டிடம் விடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை கப்பலில் உள்ள இலங்கையர்களுக்கு இல்லை என்றும் ஹெவின் ரூட் குறிப்பிட்டுள்ளார்.