தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களான எஸ். ஜெயானந்தமூர்த்தி, பி. அரியநேத்திரன், எஸ். கஜேந்திரன் ஆகிய மூவரும் பயங்கரவாத விசாரணைப்பிரிவுப் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த மூவரும் வெளிநாடுகளில் ஆற்றியவை எனக் கூறப்படும் உரைகள் தொடர்பாகவே பொலிஸாரால் குடையப்பட்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியம், ‘பயங்கரவாதச் செயற்பாடுகளை’ நியாயப்படுத்தல் ஆகியவை குறித்தும், இலங்கை, இலங்கை அரசு, இலங்கைப் படைகள் ஆகிய தரப்புகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்திலும் அவர்கள் உரையாற்றியுள்ளனர் எனத் தெரிவித்து, அதன் அடிப்படையிலேயே அவர்கள் நோண்டப்பட்டிருக்கின்றார்கள்.
1983 ஜூலைக் கலவரத்தை அடுத்து, அப்போதைய ஜெயவர்த்தனா அரசினால் - தமிழர் தரப்பின் சம்பந்தம் ஏதுமின்றி ஒருதலைப்பட்சமாக - கொண்டுவரப்பட்ட அரசமைப்பின் ஆறாவது திருத்தத்தின் ஷரத்துக்களையே இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் மீது ஏவிவிட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது வெளிப்படை.
1983 ஜூலைக் கலவரம் ஈழத் தமிழர்கள் மீது பௌத்த - சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிடப்பட்ட முறையில் ஏவிவிடப்பட்டது என்பது பகிரங்க இரகசியம்.
இந்தக் கொடூரத்தின் தவறுக்கான பொறுப்பைத் திசைதிருப்பிவிடுவதற்காக அரசமைப்பின் ஆறாவது திருத்தம் பேரினவாதத்தினால் நாடாளுமன்றுக்கு அப்போது அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டது.
அத்திருத்தத்தின்படி -
இலங்கையர் எவரும் நாட்டுக்குள்ளேயோ, வெளியேயோ பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படக்கூடாது; பிரிவினையை ஆதரித்துப் பேசவோ, பிரசாரம் செய்யவோ இயலாது.
பௌத்த - சிங்களத் தரப்பால் ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டவிதியால் அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் 17 எம். பிக்களும் தமது பதவியை உறுதிப்படுத்தும் விதத்தில் புதிய சத்தியப்பிரமாணத்தைச் செய்ய இயலாமல் போனது. அதனால் அவர்கள் பதவி இழந்தனர். அந்தப் பதினேழு எம்.பிக்களின் ஆதரவால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முதன்முதலாகப் பெற்றிருந்த ஒரேயொரு தமிழரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் அந்தப் பதவியை இதனால் இழக்கவேண்டியவரானார்.
கொள்கைப் பிடிப்புக் காரணமாகத் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் - தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பிக்கள் - இவ்வாறு தமது பதவியை இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது தமிழர் தரப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக்கூட, தமது அறுதிப் பெரும்பான்மையைக் கொண்ட நாடாளுமன்றப்பலம் மூலம் சிங்கள ஆட்சிப்பீடம் இல்லாமல் செய்யவைக்க -
வேறு வழியின்றி ஈழத் தமிழர்களின் முழுப் பார்வையும், சிந்தனையும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின்பால் முழு அளவில் திரும்பியது.
ஜனநாயக வழியில் தெரிவான தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைச் சிதறடிக்க வைத்ததன்மூலம், ஈழத் தமிழர்கள் மத்தியில் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத் தீ முழு அளவில் விளாசி எரிவதற்கு வழி செய்தது சிங்களம்.
இப்போதும் அதைப் போன்ற முட்டாள்தன நடவடிக்கைகளே கட்டவிழ்கின்றன என்பதை உய்த்துணரக்கூடியதாக இருக்கின்றது.
ஈழத் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு ‘புலிகளின் ஏவலர்கள்’ என்ற பட்டம் சூட்டி, அடையாளப்படுத்தி, எம்.பி. பதவிகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிகின்றது.
பிரிவினைக்கு எதிரான அரசமைப்பின் 6 ஆவது சட்டத்திருத்தம் -
பயங்கரவாத தடுப்புச் சட்டம் -
அவசரகாலச்சட்ட விதிகளின் கீழான ஒழுங்குகள் மற்றும் ஏற்பாடுகள் -
போன்றவை ‘தமிழ்த் தேசியம்’ குறித்து சிரத்தை கொண்ட அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் போன்றோர் மீது இலகுவாகப் பாயத் தயாராகி வருகின்றன என்று அரசியல் கள நிலைவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியம் குறித்துக் குரல் எழுப்புகின்ற அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் கருத்து நிலைப்பாட்டை ஒலிக்கவிடாமல் அமுக்குவதன் மூலம் தமிழர்களின் உரிமைக்கான எழுச்சியை அடக்கி, அவர்களை நிரந்தர அடிமைகளாக்கி, ஆளலாம் எனச் சிங்களம் கனவு காண்கின்றது.
அதற்குக் கட்டியம் கூறுவது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு எதிராக, பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸார் மேற்கொள்ளும் கெடுபிடிகள் அமைந்திருக்கின்றன.
தமிழ்த் தேசியத்துக்காகக் குரல் எழுப்பும் எம்.பிக்களை கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தி, அவர்களை அச்சுறுத்தி, அவர்களின் எம்.பி. பதவிகளைப் பறிப்பதன் மூலம், தமிழர்கள் மத்தியில் ஒட்டுக் குழுக்களையும், துணைப்படைகளையும் நிலைநிறுத்தி, தமது ஏவலர்களான அந்த அணிகளின் தலைவர்களைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக வெளிப்படுத்தும் ‘குயுக்தித் தனமே’ இப்போது இங்கு இடம்பெறுகின்றது.
இதன் பெறுபேறு பல விபரீத விளைவுகளைத் தரும் என்பது நிச்சயம்.